Friday, June 4, 2010

பின் பாஜ் ரஹிமஹுல்லாஹ் அவர்களைப் பற்றி அவதூறு பரப்பும் பீ.ஜே

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹ்.

எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே. ஸலவாத்தும் ஸலாமும் இறுதி இறைத் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அன்னாரின் கிளையார்கள், தோழர்கள் மற்றும் அன்னாரை அழகிய முறையில் இறுதித் தீர்ப்பு நாள் வரை பின்பற்றி வாழும் ஸாலிஹான அடியார்களின் மீதும் நிலவட்டுமாக!

 நம்முடைய சம காலத்தில் வாழ்ந்த பேரறிஞரும் சௌதி அரபிய்யாவின் முன்னாள் தலைமை முஃப்தியுமான பின் பாஜ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் பற்றி தமிழ்நாட்டின் முஃதஜிலாவான பீ.ஜே அவர்கள் பரப்பி வரும் புரட்டு வாதங்களை தோலுரித்துகாட்டுவதே இந்த ஆக்கத்தின் நோக்கம்.

 வழிகெட்ட முஃதஜிலா பீ.ஜே ஒரு முறை இலங்கையில் பேசும்போது "பின் பாஜ் என்பவர் பூமி தட்டை எனக் கூறுகிறாராம்" என்று ஒரு செய்தியைக் கூறினார். ஒரு அறிஞரின் மீது இவர் ஒரு குற்றச்சாட்டை கூறுகிறார் என்றால் இவர் தான் தன்னுடைய குற்றச்சாட்டுக்கு ஆதாரம் கொண்டு வர வேண்டும். ஆனால் அப்படி எந்த ஒரு ஆதாரத்தையும் அவர் கொடுக்கவில்லை.

 பின் பாஜ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் பற்றி இப்படி ஒரு அவதூறு பரவியது உண்மை தான். ஆனால் இது ஒரு அவதூறே தவிர உண்மை இல்லை. இதற்கு போதிய அளவிற்கு மறுப்பும் வந்து விட்டது. இந்த மறுப்புகளிலெல்லாம் முத்தாய்ப்பாக பின் பாஜ் அவர்களின் கீழ்கானும் ஒரு ஃபத்வாவே போதுமானது.

பூமி உருண்டையானதா அல்லது தட்டையானதா?

அவர்கள் அளித்த பதில்:
அறிஞர்களிடத்தில் பூமி உருண்டையானதே. அது உருண்டையானது என்பதுதான் ஏகோபித்த கருத்து என்பதை இப்னு ஹஸ்ம் மற்றும் பல அறிஞர்கள் கூறியுள்ளார்கள். அதாவது பந்தைப் போன்ற ஒன்றோடு ஒன்று சேர்ந்தது. எனினும் நாம் வாழ்வதற்காக அதன் மேற்பரப்பை அல்லாஹ் விரித்து வைத்துள்ளான். அதில் நமக்குத் தேவையான மலைகள், கடல்கள் மேலும் பல உயிரினங்களையும் படைத்துள்ளான்.
அல்லாஹ் கூறுகின்றான்.

பூமி அது எவ்வாறு விரிக்கப்பட்டுள்ளது என்று அவர்கள் பார்க்க வேண்டாமா? (அல்குர்ஆன்: 88:20)
 மக்கள் நிம்மதியாக வாழ்வதற்காக அதன் மேற்பரப்பு விரிக்கப்பட்டுள்ளது. அது உருண்டை வடிவில் இருப்பதும் அதன் மேற்பரப்பு விரிக்கப்பட்டுள்ளதும் முரண்பட்டதல்ல. ஏனெனில் உருண்டையாக உள்ள ஒரு மாபெரும் பொருளின் மேற்பரப்பு விரிக்கப்பட்டால் அதன் மேற்பரப்பு விசாலமானதாகவே இருக்கும்

இது பின் பாஜ் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் அதிகாரப்பூர்வமான ஃபத்வா. மேலும் கீழ்காணும் லிங்கை சொடுக்கி ஷெய்க் அவர்களின் குரலை கேட்கலாம்.

http://www.fatwa-online.com/audio/other/oth002/0040814.htm 


இதுதான் இந்த விஷயத்தில் உண்மை நிலவரம். இது இவ்வாறிருக்க பீ.ஜே முஃதஜிலா வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்ற ரீதியில் ஒரு புரளியை நம்பி பின் பாஜ் அவர்களைப் பற்றி ஒரு அவதூறைப் பரப்பி விட்டுச் சென்றுவிட்டார்.

தவறு செய்வது மனித இயல்பு தான். இந்த விஷயம் அவதூறு என்று தெரியவந்ததும் தன்னுடைய பேச்சை வாபஸ் பெற்று அதற்கு வருத்தம் தெரிவித்து இருந்தால் அது ஒரு முஸ்லிமின் உயரிய பண்புகளில் நின்றும் உள்ளதாக இருந்திருக்கும். 

ஆனால் தன்னுடைய மலிவான புரட்டு வாதங்களின் மூலம் மேலும் மேலும் அதே பொய்யைப் பரப்பி வருகிறார் இந்த வழிகேடர் பீ.ஜே. ஆனால் இதுவரை பின் பாஜ் இவ்வாறு கூறியதற்கு பின் பாஜ்  எழுதிய நூற்களிலிருந்தோ அல்லது அவர் பேசிய ஆடியோ டேப்களிலிருந்தோ ஒரு முறை கூட ஆதாரத்தைக் காட்டவில்லை. வெறும் புரட்டு வாதங்களின் மூலம் தன்னுடய தவறை நியாயப்படுத்துகிறார்.

இந்த வழிகேடரை பொறுத்தமட்டில் அறிவியலும், நவீன விஞ்ஞானமும் மார்க்கத்தின் அடிப்படைகள். இவரைப் பொறுத்து பூமி தட்டையா அல்லது உருண்டையா என்பது அகீதாவைச் சார்ந்தது போலும்.

இந்த முஃதஜிலாக்களுக்கு நாம் சொல்வது என்னவென்றால் எங்களுக்கு குர்ஆனும் சுன்னாவும் தான் மூல ஆதாரங்கள். யூத,கிருஸ்தவ மற்றும் இறை மறுப்பாளர்களின் அறிவியலும் விஞ்ஞானமும் அல்ல. நாங்கள் யூத கிருஸ்தவ விஞ்ஞானிகளின் கூற்றைக் காட்டிலும் அஹ்லுஸ் ஸுன்னாவின் அறிஞர்களின் கூற்றுக்கு முன்னுரிமை கொடுக்கிறோம்.

ஒரு ஐம்பது ஆண்டுகள் முன்னர் வரை இதே விஞ்ஞானிகள் சூரியன் நிலையாக நிற்கிறது என்று கூறினர்.ஆனால் எம்மைப் படைத்த வல்ல அல்லாஹ் கூறுகிறான்.

இன்னும் (அவர்களுக்கு அத்தாட்சி) சூரியன் தன் வரையரைக்குள் அது சென்று கொண்டிருக்கிறது இது யாவரையும் மிகைத்தோனும், யாவற்றையும் நன்கறிந்தோனுமாகிய (இறை)வன் விதித்ததாகும்.  (36:38)

இந்த விஞ்ஞானிகளின் கூற்றை நம்பி ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் எவரேனும் சூரியன் நிலையாக நிற்கிறது என்று கூறியிருந்தால் அவன் காஃபிராகி இருப்பான். ஏனெனில் அவன் அல்லாஹ்வின் கூற்றை மறுக்கிறான். அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக!

நாங்கள் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் என்ன கூறினாலும் "சமிஃனா வ அதஃனா" (செவியுற்றோம் அடிபணிந்தோம்) என்று கூறுகிறோம். அது அறிவியலுக்கும் விஞ்ஞானத்திற்கும் முரண் போல் காட்சி அளித்தாலும் சரியே. அது எங்கள் அறிவிற்கு எட்டவில்லை என்ற போதிலும் நாங்கள் கட்டுப்படுகிறோம்.

எங்களை, அஹ்லுஸ் ஸுன்னாவைப் பொறுத்த மட்டில் நாங்கள் அறிவியலையும், விஞ்ஞானத்தையும், மேற்கத்திய தர்க்க வாதங்களையும் இஸ்லாமிய அழைப்பு பணியின்போது முன்வைப்பதில்லை. நபிமார்களின் அழைப்புமுறையே எங்களின் அழைப்பு முறை. மேற்கத்திய லாஜிக்கும் ஃபிலோசோப்பியும் நவீன அறிவியலும் எவ்வளவு அழகாக தெரிந்த போதிலும் அதை நாங்கள் துணைக்கு அழைக்கப்போவதில்லை.

அல்லாஹ் போதுமானவன்!

ஆக்கம்:
அஹ்மத் ஃபிர்தௌஸ் பின் அஹ்மத் அஸ்ரஃப் ஸலஃபி

No comments:

Post a Comment