Sunday, October 18, 2009

தக்லீத்-கூடுமானதும் கூடாததும்

(சஊதி அரேபியாவின் உயர்மட்ட மார்க்கத் தீர்ப்புக் குழுவின் உறுப்பினர்களான அஷ்ஷெய்க் அப்துல் அஸீஸ் பின் பாஸ், அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் பின் குதையான், அஷ்ஷெய்க் அப்துர்ரஸ்ஸாக் அல்-அஃபீஃபி ஆகியோர் அளித்த மார்க்கத் தீர்ப்பின் தமிழாக்கம்.)

அல்லாஹ் ஒருவனுக்கே எல்லாப் புகழும். அவனுடைய தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும் அன்னாரின் குடும்பத்தார், தோழர்கள் அனைவர் மீதும் அல்லாஹ்வின் பேரருளும் பெருங்கருணையும் உண்டாகட்டுமாக!

இஸ்லாமிய அடிப்படையை விளக்க வந்த பேரறிஞர்கள் சிலர், ‘தக்லீத்’ என்பதற்கு, ‘ஒருவரின் சொல்லை அல்லது செயலை அவரைப்பற்றி அறியாமல், அவற்றின் சான்றுகளைப்பற்றி ஆராயாமல் ஏற்றுக்கொள்வது’ எனப் பொருள் கொள்கின்றனர். இன்னும் சிலரோ, ‘ஒருவரின் சொல்லை அல்லது செயலை ஏன், எதற்கு எனக் கேட்காமல் ஏற்றுக்கொள்வது’ என்று பொருள் கொள்கின்றனர்.

பேரறிஞர் அபூ மஆலி அல்-ஜுவைனி (ரஹ்) அவர்கள், “தக்க சான்றுகள், தகுந்த அறிவு ஆகியவற்றின் அடிப்படையின்றி ஒருவரைப் பின்பற்றுவது ‘தக்லீத்’ எனப்படும்” என்ற கருத்தைத் தெரிவு செய்கின்றார்கள். மார்க்கவியல் வறைமுறையாளர்களான இப்பேரறிஞர்களின் கருத்துகள் வெவ்வேறு சொற்களால் ஆனவை ஆயினும், அவை ஏறத்தாழ ஒத்தவையாகவே இருக்கக் காண்கிறோம். அடிப்படையில், தக்லீதின் சுருக்கமான பொருளைக் கூறுவதே நமது நோக்கம்.

தக்லீதின் வகைகள், ஒவ்வொன்றைப்பற்றிய மார்க்கத் தீர்ப்பு யாது என்பதை நாம் இப்போது காண்போம்:

அ. நபிவழியில் தெளிவான ஒரு சான்று கிடைக்கப்பெற்ற பின்னரும், ஒரு சட்டத்தைத் தெரிந்தெடுக்கத் தகுதி பெற்ற ஒருவர் - அதாவது, முஜ்தஹித் - தக்க சான்றில்லாத இன்னொருவரின் சட்டத்தைப் பின்பற்றுவது. குர்ஆன்-சுன்னாவிலிருந்து ஒருமித்த கருத்தை எட்டிய பின்னர், அதைப் புறக்கணித்துவிட்டு, தக்க சான்றில்லாத ஒன்றைப் பின்பற்றுவது அறவே கூடாது.

ஆ. சட்டத்தைத் தெரிந்தெடுக்கும் தகுதியைப் பெற்ற ஒருவர் (முஜ்தஹித்), தானாகவே ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்னர், இன்னொரு முஜ்தஹிதைப் பின்பற்றுவது. இந்தப் பின்பற்றலும் கூடாது. இதுவே இமாம்களான „¡·பிஈ(ரஹ்), அஹ்மத்(ரஹ்) போன்றவர்களின் கருத்தாகும். இதுவே மிகச் சரியானதுமாகும். ஒரு தகுதியைப் பெற்ற பின்னரும், அதனைப் பயன்படுத்திச் சட்டத்தை விளங்கிக்கொள்ளாத குற்றத்திற்கு அவர் ஆளாகின்றார். ஏனெனில், “இத்தகுல்லாஹ மஸ்த்ததஃத்தும்” என்ற அல்லாஹ்வின் அருள்மறைக் கூற்றிற்கும், “நான் ஒன்றை உங்களுக்குக் கட்டளையிட்டால், உங்களால் இயன்றவரையில் அதனைப் பின்பற்றுங்கள்” என்ற ஆதாரப்பூர்வமான நபிமொழிக்கும் முரணாக அவர் செயல்படுவதே இதற்குக் காரணம்.

இ. அடுத்ததாக, ஒருவர் ஒரு சட்டத்தில் தீர்க்கமான முடிவுக்கு வர முடியாமல், அவர் அத்துறையில் தேர்ச்சி பெற்று ஆய்வு செய்யும் ‘முஜ்தஹித்’ எனும் மார்க்க அறிஞர் ஒருவரைப் பின்பற்றிச் செயல்படுவது. இது அனுமதிக்கப்பட்டதாகும். ஏனெனில், அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்:

“அல்லாஹ் எந்த ஓர் ஆன்மாவையும் அதன் சக்திக்கு அப்பாற்பட்டுச் சோதிப்பதில்லை.”

“நீங்கள் அறியாதவர்களாக இருந்தால், அறிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.”

இது போன்ற இன்னும் சில வழிகாட்டல்களின் அடிப்படையில், ஒருவர் தான் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நல்லறிஞர்களைச் சார்ந்திருந்து, தன் வழிபாடுகளில் தவறிழைப்பதிலிருந்து பாதுகாப்புப் பெறுகின்றார்.

ஈ. அடுத்த ‘தக்லீத்’ என்பது, இஸ்லாமிய ஷரீஅத்துக்கு மாற்றமாக, ஒருவர் தன் முன்னோர்கள், தலைவர்கள், ஆட்சியாளர்கள் போன்றவர்களை அவர்கள் சார்ந்திருக்கும் சமூகம் அல்லது மனோஇச்சைகளுக்காகக் கண்மூடித் தனமாகப் பின்பற்றுவது. இது ஒட்டுமொத்த இஸ்லாமியச் சமூகத்தின் ஆய்வறிஞர்களின் கருத்துப்படி, கூடாததும் கண்டிக்கத் தக்கதுமாகும். இதற்கு ஏராளமான சான்றுகள் குர்ஆன்-சுன்னாவில் காணக் கிடைக்கின்றன. வல்லமை மிக்க அல்லாஹ் கூறுகின்றான்:

“மேலும், ‘அல்லாஹ் அருளிய இ(வ்வேதத்)தைப் பின்பற்றுங்கள்’ என்று அவர்களுக்குக் கூறப்பட்டால், (அவர்கள்) ‘இல்லை! எம் மூதாதையர் எதில் பற்றுக்கொண்டு இருக்க நாங்கள் கண்டோமோ, அதனையே நாங்கள் பின்பற்றுவோம்’ என்று கூறுகின்றனர்.” (அல்பகரா-170)

அருளாளனாகிய அல்லாஹ் மேலும் கூறுகின்றான்: “ஆனால், (நபியே!) உம் இரட்சகன்மீது ஆணையாக, அவர்கள் தங்களுக்குள் ஏற்பட்ட சச்சரவில், உம்மை நீதிபதியாக ஏற்று, நீர் செய்யும் தீர்ப்பைத் தம் மனத்துள் எத்தகைய பொருத்தமின்மையும் இன்றி ஏற்று முற்றிலும் வழிப்படாதவரையில், அவர்கள் உண்மை நம்பிக்கையாளர்களாக மாட்டார்கள்.” (அந்நிசா-65)

மேலும் அல்லாஹ் தஆலா கூறுகின்றான்: “அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஏதேனும் ஒன்றைப்பற்றிக் கட்டளையிட்ட பின்னர், அதில் வேற்றுக் கருத்தைக் கொள்வதற்கு இறைநம்பிக்கயாளராகிய எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை.” (அல்அஹ்ஸாப்-36)

அல்லாஹ் இன்னும் கூறுகின்றான்: “(நம்பிக்கை கொண்டவர்களே!) உங்களுள் எவர்கள் (நபியாகிய) அவருடைய கட்டளைக்கு மாறு புரிகின்றார்களோ, அவர்கள் தங்களுக்கு யாதொரு தீங்கோ துன்புறுத்தும் வேதனையோ வந்தடையும் என்பதைப்பற்றி அஞ்சிக்கொண்டிருக்கட்டும்.” (அந்நூர்-63)

அல்லாஹ் மேலும் கூறுகின்றான்: “(நபியே! மனிதர்களை நோக்கி) நீர் கூறும்: ‘நீங்கள் மெய்யாகவே அல்லாஹ்வை நேசிப்பவர்களாயிருந்தால், என்னைப் பின்பற்றுங்கள். (அப்போது) உங்களை அல்லாஹ் நேசிப்பான்; உங்கள் பாவங்களை மன்னிப்பான்.” (ஆலு இம்ரான்-31)

இதோ, இன்னும் கூறுகின்றான்: “அவர்களுடைய முகங்களைப் புரட்டிப்புரட்டி நெருப்பில் பொசுக்கும் நாளில், ‘எங்களுடைய கேடே! நாங்கள் அல்லாஹ்வுக்கு வழிப்பட்டிருக்க வேண்டாமா? (அவனுடைய) தூதருக்கும் வழிப்பட்டிருக்க வேண்டாமா?’ என்று கதறுவார்கள். அன்றி, ‘எங்கள் இரட்சகனே! திண்ணமாக நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும் எங்கள் பெரியோர்களுக்கும் மட்டுமே வழிப்பட்டோம். அவர்கள் எங்களைத் தப்பான வழியில் செலுத்திவிட்டார்கள்’ என்றும் பிதற்றுவார்கள்.” (அஹ்ஸாப்-66,67)

Source:http://www.fatwaislam.com/fis/index.cfm?scn=fd&ID=24
மொழிபெயர்ப்பு: அதிரை அஹமத் அபூ பிலால்